கபிலர்.
மணற்சிற்றில் காலிற் சிதையா, அடைச்சிய
கோதை பரிந்து,வரிப்பந்து கொண்டோடி
நோதக்க செய்யும் சிறுபட்டி,மேலோர் நாள்,
அன்னையும் யானும் இருந்தோமா, "இல்லீரே
உண்ணுநீர் வேட்டேன்" என வந்தாற்கு,அன்னை
'அடர்பொன் சிரகத்தால் வாங்கிச் சுடர் இழாய்,
உண்ணுநீர் ஊட்டிவா'என்றாள்;என,யானும்
தன்னை அறியாது சென்றேன்,மாற்று என்னை
வளைமுன்கை பற்றி நலியத் தெருமந்திட்டு,
'அன்னாய்,இவன் ஒருவன் செய்தது காண்' என்றேனா,
அன்னை அலறிப் படர்தரத், தன்னை யான்
'உண்ணுநீர் விக்கினான்'என்றேனா,அன்னையும்
தன்னைப் புறம்பழித்து நீவ, மாற்று என்னைக் கடைக்காணல்
கொல்வான்போல் நோக்கி,நகைக்கூட்டம்
செய்தான்,அக் கள்வன் மகன்"
விளக்கம்
மிகுந்த நாணம் கலந்த சொற்களில்,தன் காதலன் செய்த காதல்விளையாட்டை,அன்போடும் பெருமிதத்தோடும் சொல்கிறாள் காதலி..
"சிறுவயதில் மணற்பரப்பில் பந்தை வைத்து விளையாடி இருக்கிறேன் அவனோடு,என்ன செய்தான் தெரியுமா ஒரு நாள்?, நானும் என் தாயும் வீட்டிற்குள் இருந்தோம், "வீட்டில் யாரும் இல்லியா?கொஞ்சம் குடிக்க தண்ணீர் வேண்டும்"என்று சத்தம் கொடுத்தான்.உடனே என் தாயும்,தங்கக் குவளையில் தண்ணீரை எடுத்துக் கொடுத்து,"மகளே நீரைக் கொடுத்துவிட்டு வா"என்று அனுப்பினாள்.நானும் யார் எவர் என்று தெரியாமல் தண்ணீர் எடுத்துக்கொண்டு போய்ப் பார்த்தாள்..இவன் நிற்கிறான்.நான் கொடுத்த தண்ணீரை வாங்கிக்கொண்டே என் கையை வளையல்களோடு சேர்த்து அழுத்தினான். "அம்மா இங்கேபார்" என்று கத்தி விட்டேனா..அதைக் கேட்ட தாய் பயந்து அலறி என்னவென்று கேட்டுக்கொண்டே வாசலுக்கு வந்தாளா..நான் சுதாரித்து,தண்ணீர் குடித்ததும் விக்கினான் என்று சொல்லிச் சமாளித்தேன்.உடனே என் தாய் அவன் முதுகை அன்போடு நீவி விட்டு ஒன்றுமில்லை என்று சொல்லிக்கொண்டிருக்கும் பொழுது, என் அன்னை பார்க்கத அந்தத் தருணத்தில் அவன் என்னைப் பார்த்து கடைக்கண்ணால் சிரிக்கிறான்,திருட்டுப்பயல்.."
எவ்வளவு அருமையான நிகழ்வு? அந்தக் காதலிக்குத்தான் எவ்வளவு ஆனந்தம்..காதல்.
Labels: தமிழ்
0 Comments:
Post a Comment
<< Home