Thursday, March 11, 2010

குறியும் இலக்கும்

ஷாஓலின் என்ற Martial Arts மரபைப் பற்றி கள்விப்பட்டிருப்பீர்கள்.
    அகத்தியத்தில் பலமுறை எழுதப்பட்ட ஒன்று.

    புத்தபிக்குகளால் வளர்க்கப்பட்ட போர்முறை ஒன்று அந்த மடத்தைச்
சேர்ந்தவர் களிடம்  உண்டு.


    அந்த மரபைச் சேர்ந்த மஹாகுரு ஒருவர் இருந்தார். அவருக்குப் பல சீடர்கள். வில்வித்தை, ஈட்டி எறிதல், மற்போர் போன்ற பலவற்றிலும் கைதேர்ந்தவர்.

    இன்னொரு நாட்டைச்சேர்ந்த வில்லி ஒருவன் அவரிடம் வந்தான். ஏதாவது நாடகத்தில் அல்லது படத்தில் வரும் கதாபாத்திரம் என்று நினைத்துவிடவேண்டாம். வில்வீரனுக்குப் பழைய பெயர் 'வில்லி'. ராமனை
'சுந்தரவில்லி' என்று, லட்சுமணனை 'உறங்காவில்லி' என்றும் குறிப்பிடுவார்கள்.

    அவரிடம் தன்னுடைய வில்வித்தைத் தேர்ச்சியைக் காட்டினான். ஒரு மரத்தைக் குறி வைத்து அம்பெய்தான். அதன் பின், இன்னொரு அம்பை எய்தான். அது முதல் அம்பைப் பிளந்துகொண்டு அதே இலக்கில் பாய்ந்தது.

    "இது போல் உம்மால் அம்பெய்ய முடியுமா? - எகத்தாளம், இறுமாப்பு, கர்வத்துடன் கேட்டான்.

    மஹாகுரு ஒன்றும் சொல்லவில்லை.

    தம்முடன் வருமாறு கைச்சைகையைக் காட்டிவிட்டு விடுவிடென்று எங்கோ சென்றார். காட்டுக்குள் நுழைந்து ஒரு மலையின் மீது ஏறிச் சென்றார்.

    அந்த மலையின்மீது ஒரு பெரிய பிளவு இருந்தது. அந்தப் பிளவு பலநூறு அடிகள் ஆழம் கொண்டது. அதன்மீது ஒரு மரத்தை வெட்டி குறுக்கே   போட்டிருந்தார்கள். அதன்மீது நடந்துதான் அந்தப் பிளவைக் கடக்கமுடியும். அதுவோ கனம் அதிகம் இல்லாதது. கோணல்மாணலாகவும் இருந்தது. காலை வைத்தாலேயே கடகடவென்று ஆடியது. கொஞ்சம் புரண்டாலும் கிடுகிடு பள்ளத்தில் விழுந்துவிட நேரிடும்.

    மஹாகுரு வில் அம்பை வில்லியிடமிருந்து வாங்கிக்கொண்டார்.

    மஹாகுரு அந்தமரத்தின்மீது கால்வைத்து நடந்தார். அதன் நடுப்பகுதிக்குச்
சென்றார்.


    அங்கு நின்றுகொண்டு வில்லை எடுத்து அம்பைப்பூட்டினார். மறு பக்கத்தில் தூரத்தில் தெரிந்ததொரு மரத்தைக் குறிவைத்து அம்பை எய்தார்.

    அது சற்றும் பிசகாமல் அந்த மரத்தின்மீது தைத்து நின்றது.

    குறுக்குப்பாலத்திலிருந்து திரும்பிய மஹாகுரு, வில்லையும் அம்பையும் திருப்பி வில்லியிடம் கொடுத்துவிட்டுச் சொன்னார்.

    "இப்போது நீ அந்தப் மரத்தின்மீது நின்றுகொண்டு அதே மரத்தைக் குறிபார்த்து அம்பை எய், பார்க்கலாம்", என்றார்.

    அந்தப் பள்ளத்தைப் பார்த்ததுமே வில்லிக்கு நடுக்கம். அதுவும் அந்த மரத்தின் மீது ஏறுவதாவது.

    இருப்பினும் ஏறிச்சென்றான். மரம் ஆடியது. கொஞ்சதூரம் போனதுமே கீழே பார்த்தான்.
   
    வில்லிக்குத் தலை சுற்றியது; உடலெல்லாம் நடுங்கியது; வியர்த்து விறுவிறுத்துப் போனான். நாவெல்லாம் உலர்ந்து போயிற்று. ரல்கொடுக்கக்கூட அவனால் முடியவில்லை. நடுக்கத்தில் டக்கென்று கால் நழுவியது.
    அப்படியே படுத்துக்கொண்டு அந்த மரத்தைக் கட்டிப்பிடித்துக்கொண்டான்.

    மஹாகுரு மரத்தின்மீது ஏறிச்சென்றார்.
    அந்த வில்லியை அப்படியே தூக்கினார்.
    திரும்பிவந்தார்.

    அவனை இறக்கிவிட்டுவிட்டு சொன்னார்.

    "உன்னுடைய திறமையெல்லாம் உன்னுடைய வில்லுடன்தான் இருக்கிறது. அதை
நீ ஆள்கிறாய். ஆனால் அதை எய்வதற்குக் காரணமாக இருக்கும் உன்னுடைய மனது உன்னுடைய கட்டுப்பாட்டிலும் ஆளுமையிலும்
இல்லை.  குறியும் இலக்கும் உன் மனதில்தான் பிறக்கின்றன.   அதை முதலில் கட்டுப்படுத்து."

Labels:

0 Comments:

Post a Comment

<< Home