வில்லெறிந்த விதுரர்
வில்லெறிந்த விதுரர்
மகாபாரதம் மிக மிக நீளமான இதிகாசம். அதில் பல வரலாறுகள், கதைகள், குட்டிக்கதைகள், சம்பவங்கள் எல்லாம் உண்டு. அவற்றை ஒன்றுடன் ஒன்று தொடர்பு படுத்தி, அற்புதமான முறையில் அந்தக் கதையைப் பின்னியிருக்கிறார் வேதவியாசர். பாரதத்தின் முக்கிய க்ளைமாக்ஸ் பாரத யுத்தம். அதில் கௌரவர்களும் பாண்டவர்களும் மோதிக் கொள்கின்றனர். ஆனால் அந்த யுத்தத்திற்கு முன்பு பாண்டவர்கள் hopelessly out-numbered, out-matched, and out-gunned.
பாண்டவர்களிடம் ஏழு அக்குரோணி(அட்சௌஹினி) சேனையென்றால் கௌரவர்களிடமோ பதினொன்று.
பாண்டவர்களில் அர்ஜுனன், பீமன், அபிமன்யு, கடோத்கஜன், திருஷ்டத்யும்னன் போன்ற மாவீரர்கள் இருந்தனர். ஆனால் கௌரவர்கள் தரப்பிலோ தானாகவே அல்லாது பிறரால் மரணம் அடையமுடியாத பீஷ்மர், அனைவருக்கும் ஆசானாகிய துரோணர், இறவாவரம்பெற்ற சிரஞ்சீவியும் வெல்லமுடியா வீரருமான அஸ்வத்தாமன், பாண்டவர்களை வெல்லும் வரத்தை சிவனிடமிருந்து வாங்கியிருந்த ஜயத்ரதன், கிழட்டுவீரன் பகதத்தன், பயிற்சியில் பீமனையும் விஞ்சிய துரியோதனன், அர்ஜுனனைப் பல வகைகளிலும் விஞ்சிய கர்ணன், ஆகிய பலர் இருந்தனர்.
ஆயுதங்களை எடுத்துக் கொண்டால், துரொணர், பீஷ்மர், அஸ்வத்தாமன் ஆகியோருடைய ஆயுதங்களுக்கு ஈடாக ஏதும் இல்லை. கர்ணனுடைய நாகாஸ்திரம், சக்தியாயுதம், விதுரருடைய நாராயண தனுசு ஆகியவை விசேடமானவை.
தர்மம் இருக்குமே வெல்லும். தர்ம தேவனின் அம்சமாக பிறந்தவர்தான் தர்மபுத்திரரான யுதிஷ்டிரர். ஆகவே அவர் இருக்கும் கட்சியே வெல்லும். இது நியதி.
ஆனால் அந்த யுகத்தில் தர்மதேவன் தன்னுடைய அம்சத்தை ஒரே சமயத்தில் இன்னொரு பிறவியும் எடுக்கவைத்திருந்தான். அவர்தான் மேதையும் மகானும் ஆகிய விதுரர். வேதவியாசருக்குப் பிறந்தவர். மன்னன் திருதராஷ்டிரன், பாண்டு ஆகியவர்களின் தம்பியாகவும், அமைச்சராகவும், ஆலோசகராகவும் விளங்கினார். 'புத்தியில் விதுரன்' என்ற சொற்றொடருக்குக் காரணராகவும் வி¢ளங்கியவர். 'விதுரநீதி' என்ற பெயரில் அவருடைய நீதித்துறை விளங்கியது. அவரிடம் உள்ள நாரயண தனுசு அவரை வெல்லப்படமுடியாத பெருவீரராக்கி விட்டிருந்தது. மேலும் யுத்த அரங்கத்தில் அவருடைய ஆலோசனைகள் கௌரவர்களுக்கே
வெற்றியை நிச்சயப்படுத்தியிருக்கும்.
அதுவும் அவர் தர்மதேவதையின் அம்சம். தர்மபுத்திரரின் தார்மீக பலத்தை அவர் சமனப்படுத்தி விடுவார். இப்படியாக கௌரவரின் வெற்றிவாய்ப்பு சர்வ நிச்சயமாக இருந்தது.
ஆனால் கிருஷ்ணர் அவ்வாறெல்லாம் நடக்கவிட்டுவிடுவாரா என்ன?
மகாபாரதத்தின் முக்கிய கட்டங்களில் ஒன்று, கிருஷ்ணன் தூது.
யுத்தத்தைத் தவிர்ப்பதற்காக கிருஷ்ணரைப் பாண்டவர்கள் கௌரவர்களிடம் தூதாக அனுப்பினார்கள். சிலப்பதிகாரத்தில், மதுரைக் காண்டத்தில், ஆய்ச்சியர் குரவையில் வருகிறதல்லவா?.........
மடந்தாழு நெஞ்சத்துக் கஞ்சனார் வஞ்சம்
கடந்தானை, நூற்றுவர்பால் நாற்றிசையும் போற்றப்
படர்ந்தார ணமுழங்கப் பஞ்சவர்க்குத் தூது
நடந்தானை ஏத்தாத நாவென்ன நாவே?
"நாராயணா" என்னா நாவென்ன நாவே!"
என்றவாறு கிருஷ்ணர் அஸ்தினாபுரத்துக்குத் தூது சென்றார்.
அவருக்கு அங்கே பல மாளிகைகள் காத்திருந்தும்கூட அங்கெல்லாம் அவர் தங்காமல் விதுரரின் குடிலில் தங்கிவிட்டார். இதனைப் பெரிய அவமானமாக துரியோதனன் கருதினான்.மேலும் எதிரியின் தரப்பில் விதுரர் இருக்கிறாரோ என்ற சந்தேகம் வேறு. ஏற்கனவே பல பிரச்னைகளில் விதுரர் பாண்டவர்களுக்குச் சாதகமாகப் பேசியும் உதவியும் வந்திருக்கிறார் அல்லவா! அரக்கு மாளிகை விவகாரத்தில், அதன் சூழ்ச்சியை சூசகமாக உணர்த்தியவர் அவரல்லவா?
தூது அன்று காலையில் கிருஷ்ணர், துரியோதனனின் அரசவைக்கு வந்தார். யாரும் எழுந்து கிருஷ்ணருக்கு மரியாதை செய்யக்கூடாது என்று முன்கூட்டியே திருதராஷ்டிரன் சொல்லி யிருந்ததால் யாரும் எழவில்லை. விதுரரின் ஆசனத்துக்கு நேராக வரும்போது, கிருஷ்ணர் தன்னுடைய புல்லாங்குழலை நழுவவிட்டுவிட்டார். அது கிருஷ்ணருடைய காலடியில் விழுந்தது. விதுரர் எழுந்து, குனிந்து குழலை எடுத்து மரியாதையுடன் இரு கைகளாலும் கிருஷ்ணனிடம் கொடுத்தார்.
சற்று தூரத்தில், உயரத்தில் அரியாசனத்தில் அமர்ந்திருந்த துரியோதனனுக்கு இந்தக் காட்சி வேறு விதமாகத் தெரிந்தது. மிக ஆத்திரமுடன் விதுரரை வாய்க்கு வந்தபடி திட்டி, 'காட்டிக்கொடுப்பவன்', என்றும் 'எதிரியின் கைக்கூலி' என்றும் குற்றம் சாட்டினான்.
அதனைப் பொறுத்துக் கொள்ள முடியாத விதுரர், துரியோதனனை திருப்பித் திட்டிவிட்டு,
"அடே மூடனே! இனி இந்த யுத்தம் முடியும்வரையில் இந்த நாராயண தனுசைத் தொடவும் மாட்டேன். யுத்தத்தில் கலந்து கொள்ளவும் மாட்டேன்!" என்று சபதம் செய்து கூறிவிட்டு தம்முடைய நாராயண தனுசைக் கீழே தூக்கி எறிந்துவிட்டு துரியோதனனுடைய அரசவையிலிருந்து வெளியேறிவிட்டார்.
கௌரவர்களின் பக்கம் இருந்து வந்த தர்மதேவதையின் அம்சம் அவ்வாறு அகன்றவுடன் அதிலிருந்து கௌரவர்களின் வெற்றிவாய்ப்பு மங்க ஆரம்பித்தது.
Labels: தமிழ்
0 Comments:
Post a Comment
<< Home