Sunday, November 13, 2011

பீஷ்மர்

காசிராஜனின் புதல்விகள் அம்பை, அம்பிகை, அம்பாலிகை ஆகியோர் அழகு, குணம், அறிவு நிரம்பிய கன்னிகைகள், அவர்களுக்கு சுயம்வரம் ஏற்பாடு செய்தார், காசிராஜன்.
பலநாட்டு ராஜகுமாரர்கள் வந்தனர். அஸ்தினாபுரத்தை ஆண்டு வந்த விசித்திர வீர்யனுக்காக (சந்தானுவின் மகன்) சுயம்வரத்துக்கு வந்தார் பீஷ்மர்.
அங்கு வந்திருந்த, பல நாட்டு இளவரசன்களும், வயதான பீஷ்மரை ஏளனமாகப் பேசிச் சிரித்தனர்; அதனால், சினம் கொண்டார். அந்த ராஜகுமாரன்களோடு போரிட்டு வென்று, காசிநாதனின் மூன்று கன்னியரையும் தேரில் ஏற்றி, அஸ்தினாபுரம் திரும்பினார்.
சால்வ மன்னன் மீது, அம்பைக்கு ஆசை. அவள் பீஷ்மரிடம் சென்று, "நான் சுயம்வரத்திற்கு வந்திருந்த சால்வ மன்னனை மணக்க விரும்புகிறேன்...' என்றான். அவள் விருப்பப்படியே அவளை சால்வே மன்னனிடம் அனுப்பி வைத்தார் பீஷ்மர்.
அம்பையைக் கண்ட சால்வனோ, "பீஷ்மரால் தூக்கிச் செல்லப்பட்டு திரும்பிய உன் தூய்மையை நான் நம்புவதற்கில்லை...' எனக் கூறி, அவளை மணக்க மறுத்து விட்டான்.
அம்பை மீண்டும் அஸ்தினாபுரத்துக்கு வந்தாள். "சால்வ மன்னன் மீது உனக்கு மனதளவில் காதல். அதனால், உன்னை நானும் மணக்க முடியாது...' என, விசித்திர வீர்யனும் உறுதியாகக் கூறி விட்டான்.
அம்பை மீண்டும் சால்வனைத் தேடிப் போனாள். விரட்டப்பட்டு, பீஷ்மரிடமே திரும்பி வந்தாள்.
"தங்களால் தான் எனக்கு இத்தகைய நிலை. நீங்கள் தான் என்னை மணந்து கொள்ள வேண்டும்...' என, பீஷ்மரிடம் கேட்டாள் அம்பை.
"நான் வாழ்வில் திருமணமே செய்து கொள்வதில்லை என சத்தியம் செய்து கொடுத்திருக்கிறேன்; அதை மீற முடியாது...' எனக் கூறி, அம்பையின் வேண்டுகோளை மறுத்து விட்டார் பீஷ்மர்.
அஸ்தினாபுரத்திற்கும், சால்வ மன்னன் நாட்டிற்கும் பல முறை சென்று திரும்பிய அம்பை, பீஷ்மர் மீது மிகுந்த சினம் கொண்டாள். பீஷ்மரைக் கொல்ல வேண்டும் என தவம் மேற்கொண்டாள். அவள் தவத்தை மெச்சி பரமேஸ்வரன் அவள் முன் தோன்றி, "மறுபிறவியில் நீ பீஷ்மரைக் கொல்வாய்...' என அருளினார்.
உடனே, விரைவில் மறுபிறவி எடுக்க விரும்பி அம்பை நெருப்பினுள் குதித்தாள்.
துருபதனின் மகளாக, "சிகண்டினி'யாகப் பிறந்து, பின்பு, "சிகண்டி' (அரவாணி) ஆகி, மகாபாரதப் போரில், 10ம் நாள் யுத்தத்தில் பீஷ்மரை கொன்றாள்.

Labels:

0 Comments:

Post a Comment

<< Home