Fwd: காந்திய வழிமுறை
From: sundar rajan <sundararajan.svks@gmail.com>
Date: 2010/9/20
Subject: காந்திய வழிமுறை
To: MyBlog <sundararajan_svks.arjunan@blogger.com>
காந்திய வழிமுறைகளின் ஆகச்சிறந்த விளைவாக இந்தியாவில் சுட்டிக்காட்டப்படுவது 'அமுல்'. விவசாயிகளின் சிறு சிறு கூட்டமைப்புகளாக காந்திய முறையில் 1946ல் காந்தி உயிருடன் இருக்கும்போதே ஆரம்பிக்கப்பட்டது அந்த அமைப்பு. குஜராத்தில் கைரா என்ற மாவட்டத்தில் இருந்த மேய்ப்பர்கள் தங்கள் பொருட்களுக்கு போதிய விலைகிடைக்கவில்லை என்று மனக்குறையுடன் தங்கள் தலைவரும் காந்தியவாதியுமான திருபுவன் தாஸ் பட்டேல் என்பவரின் தலைமையில் வல்லபாய் பட்டேலை தொடர்பு கொண்டார்கள். வல்லபாய்பட்டேல் காந்தியவழிமுறைகளின்படி விவசாயிகள் இணைந்து பால்விற்பனைக்கான கூட்டமைப்பை உருவாக்க ஆலோசனைசொல்லி தன் அரசியல் மாணவரும் காந்தியவாதியுமான மொரார்ஜி தேசாயை அந்த செயல்பாட்டை ஒருங்கிணைக்கும்படி ஆணையிட்டார்.
மொரார்ஜி தேசாயின் வழிகாட்டலில் முழுக்கமுழுக்க காந்திய முறைப்படி சிறிய சிறிய மேய்ப்பர்களின் கிராகசபைகளாக பால்கூட்டுறவு சங்கங்கள் உருவாக்கப்பட்டு ஒருங்கிணைக்கபப்ட்டன. அந்த இயக்கம் குஜராத் முழுக்க பரவி குஜராத்தின் தலையெழுத்தையே மாற்றியமைத்தது. பிற்காலத்தில் அமுல் நிறுவனத்தின் வெற்றிகள் அனைத்துக்கும் காரணமாக அமைந்த வி.குரியன் அதில் பொறுப்புக்கு வந்தார். ஆனந்த் என்ற ஊரில் பால்கூட்டுறவு சங்கங்களின் தலைமையகம் அமைந்தது. அரைநூற்றாண்டில் அமுலின் வரலாறு ஒரு மாபெரும் வெற்றிக்கதை. இந்தியா முழுக்க பால் உற்பத்தியை தன்னிறைவு கொள்ளச்செய்தது அமுலின் முன்னுதாரணம்தான். கிட்டத்தட்ட மூன்றுகோடி மேய்ப்பர்கள் இணைந்துள்ள அமுல் உலகின் மிகப்பெரிய பால் உற்பத்தி-வணிக நிறுவனங்களில் ஒன்று.
இந்திய வரலாற்றை மட்டுமல்ல உலக வரலாற்றை எடுத்துக்கொண்டால்கூட 2004க்கான நோபல் பரிசு பெற்ற கென்ய பசுமைசெயல்பாட்டாளரான வங்காரி மாதாய், 2006 க்கான நோபல் பரிசுபெற்ற வங்கதேச கிராமிய வங்கியாளர் முகம்மது யூனிஸ் போன்ற கணிசமானவர்களிடம் நாம் காண்பது ஹிந்து சுயராஜ்யம் நூலில் காந்தி கூறுவதுபோன்ற செயல்பாட்டையே. காந்திய அணுகுமுறை என்பது மையப்படுத்தப்பட்ட அதிகாரம் மூலம் ஒரு செயல்பாட்டை அடித்தளத்திற்குக் கொண்டுசென்று நடைமுறைப்படுத்துவதற்கு நேர் எதிராக அடித்தளத்தில் அங்குள்ள சாத்தியங்களை பயன்படுத்திக்கோண்டு சிறுகச் சிறுக ஒரு செயல்பாட்டை ஆரம்பித்து மையம்நோக்கி தொகுப்பது ஆகும். இன்றுவரை உலகம் முழுக்க மீண்டும் மீண்டும் வெற்றிகரமானதாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது இந்தவழிமுறை.
http://en.wikipedia.org/wiki/Amul
Labels: தமிழ்
0 Comments:
Post a Comment
<< Home