Thursday, April 29, 2010

இராமன் காட்டுக்குப் போனது மனித குலத்தின் நன்மைக்கு எப்படி உதவியது?

இராமன் காட்டுக்குப் போனது மனித குலத்தின் நன்மைக்கு எப்படி உதவியது?

ஒரு அரசனுக்கு பிறக்கும் முதல் ஆண்  மகன், பட்டத்து இளவரசன் என அழைக்கப் பட்டு பிறகு  படத்துக்கு உரியவன் ஆகிறான் என்பது இந்தியாவிலும், உலகின் பல பகுதிகளிலும் இருந்த வந்த முறை,  வழக்கம்.  இளைய சகோதரர்கள் பலவேறு பொறுப்புகளை ஏற்று அண்ணனுக்கு ஆட்சி பொறுப்பில் உதவி செய்வதும் வழக்கமே.

அரசனாகும் உரிமை முதல் மகனுக்கு,  என்பதே அக்கால நடைமுறை.  இந்த வழக்கப் படி ஆட்சியில் அமர வேண்டியவர் இராமர்.

 அதோடு மக்களின் அன்புக்கும், விருப்பத்துக்கும் உரியவனாக இருந்திருக்கிறார் இராமர்.  மக்கள்   இராமர் பொறுமை உடையவர். கருணை உடையவர். எல்லா மக்களிடமும் அன்பு செலுத்தி மக்களில் ஒருவராக இருப்பவர், இணையற்ற வீரர்,  மனைவியைத் தவிர வேறு எந்தப் பெண்ணையும் மனதாலும் நினையாதவர், இது போன்ற பல நற்குணங்களை உடையவர், அதனால் அவர் ஆட்சிப் பொறுப்பில் அமர்வது , தாங்களே அமர்வது போல என மக்கள் கருதினர்.  மாதரர் வயதில் மிக்கார் கோசலை மனதை ஒத்தார். முதியோர் எல்லாம் தசரதனைப் போல மகிழ்ந்தனர் என்று எல்லாம் கம்பர் சொல்லி இருக்கிறார்.

தசரதனின் இளைய  மனைவியான கைகேயியும் இராமனிடம் அன்பு பூண்டவளாக அவன் அரசன் ஆவதில் மகிழ்ச்சி அடைந்த நிலையில் இருக்கிறாள். ஆனால் இராமன் அரசன் ஆனால் அவன் அன்னையும் , தசரதனின் முதல் மனைவியும் ஆகிய கோசலை முக்கியத்துவம் பெறுவாள் என்றும், கைகேயி முக்கியத்துவம் இழந்து மூலைக்கு தள்ளப் படுவாள் எனவும் அவளது தாதி தெரிவிக்கிறாள். அரண்மனையில் தன் செல்வாக்கு தொடர வேண்டும் என்கிற விருப்பத்தினால் , ஆசையினால் உந்தப் பட்டு கைகேயி பதவியை தன் மகன் பரதனுக்கு தர திட்டமிடுகிறாள்.  இராமன் 14 வருடம் வன வாசம் என்றால் அவன் திரும்பி வருமுன் பரதன் மகனுக்கு இளவரசுப் பட்டம் சூட்டி விடலாம் என்பதுவும் கைகேயியின் திட்டம்.

அதற்காக கைகேயி தசரதன் முன்பு தனக்கு அளித்திருந்த இரண்டு வரங்களை உபயோகப் படுத்துகிறார். தான் கொடுத்த வாக்கை மீற முடியாத தசரதன்,  பொறியில் சிக்கிய விலங்காக துடிக்கிறார்.

இந்த நிலையில் மனித சமுதாயத்திற்கு வாழும் வழியைக் காட்டும் வகையில் இராமர் செயல் பட்டதாகவே நான் கருதுகிறேன். என்னைப் பொறுத்தவரையில் இராமர் அந்த நேரத்திலே செயல் பட்ட விதமே, இராமாயணத்தின் முக்கிய நிகழ்வாக நான் கருதுகிறேன்.  ஆசையால் தூண்டப் பட்ட கைகேயி இராமனிடம் இருந்து ஆட்சியைப் பறித்ததோடு அவரை 14 வருடம் வன வாசம் போக சொல்கிறார்.  இது கொடுமையான அநீதியே. தவறு செய்யாமலே தண்டனைக்கு ஆள்ளக்கப் படுகிறார் இராமர்.  கைகேயின் ஆசை இந்த அநீதிக்கு காரணமாகிறது. ஆனால் இராமர் தன்னுடைய பல கொள்கைகளை ஒரே  முடிவின் மூலம் வெளிப் படுத்துகிறார். தசரதனோ, நீ என்னைக் கைது செய்து சிறையில் அடைத்து ஆட்சியைக் கைப் பற்றிக் கொள் என்கிறார். இராமருக்கு இழைக்கப் பட்ட அநீதியைக் கண்ட இலக்குவனோ, தான் தனியாக நின்று போர் புரிந்து இராமனுக்கு ஆட்சியைத் தருவதாக சூளுரைக்கிறான். மக்களின் மனங்கவர்ந்த இராமனுக்கு மக்களின் முழு ஆதரவும் இருக்கிறது.  அமைச்சரும் படைகளும் கூட இராமருக்கு இழைக்கப் பாட்டது  அநீதி என்பதை உணர்ந்து இருக்கினறார்கள். இராமன் தசரதனையும், கைகேயியையும் சிறையில் தள்ளி ஆட்சியைப் பிடித்திருக்க  இராமனால் முடியும்.

ஆனால் கைகேயிக்கு   இராமனின் பதில் இதுதான்.  "தாயே, தந்தையின் கட்டளை என்று கூறி நீங்கள் என்னிடம் இதை சொல்ல  வேண்டியதில்லை.  பரதனுக்கு பட்டத்தை அளித்து, நான் காட்டுக்கு செல்வது உங்களுக்கு மகிழ்ச்சியை தருமானால் அதை நான் மகிழ்ச்சியுடன் செய்வேன்."

இராமரின் இந்த செய்கையின் மூலம் அவர் உணர்த்திய கொள்கைகள் வருமாறு, 
1)மற்றவரின் மகிழ்ச்சிக்காக தான் விட்டுக் கொடுத்தல், மற்றவரின் மகிழ்ச்சிக்காக தான்  இன்னல்களை ஏற்றுக் கொள்ளுதல்
 
2)தந்தை ஒருவருக்கு அளித்த வரத்தை காப்பாற்றும் பொறுப்பு மகனுக்கு உண்டு.
 
3)பதவி என்பது தோளிலே போடக் கூடிய துண்டு போன்றது , கொள்கை என்பது இடுப்பிலே கட்டக் கூடிய வேட்டி போன்றது என்பதை வாழ்க்கையில் வாழ்ந்து காட்டுதல்.
 
4) ஒருவரின் ஆசையினால் உருவாகும் இக்கட்டான  நிலையை தன்னுடைய தியாகத்தினால் சரி செய்வது.
 
 

இராமன் காட்டுக்குப் போகாமல் தந்தையை எதிர்த்து நின்று இருந்தால் உண்டாகும் தவறான முன்னுதாரங்கள்:

1)பதவிக்காக சண்டை போடுதல்

2)பதவிக்காக தந்தையை சிறையில் அடைத்தல்

3)மக்களும் இராமரின் ஆதரவாளர்களும் அரசுப் படைகளுடன்

சண்டை  இட்டு நாட்டிலே பூசலும் , குழப்பமும், ஒழுங்கின்மையும் உருவாதல்.

இவ்வாறாக  இராமன் தன் சுகங்களை  மறுத்து, தன் கஷ்டங்களை  சுமந்து கொண்டு  காட்டுக்கு சென்று இருக்கிறார்.

இந்த செயல் மூலம் அவர் உலக சமுதாயத்துக்கு மிக முக்கிய ஒரு செயல் பாட்டை, கொள்கையை காட்டி இருக்கிறார். 

இந்திய சமுதாயம் இராமரின் கொள்கையின் தாக்கத்திலேயே எப்போதும் இருந்து வருகிறது.  சகிப்புத் தன்மையும், பொறுமையும், விட்டுக் கொடுக்கும் தன்மையும், தியாகமும் இந்திய சமுதாயத்தின் ஒரு தன்மையாக ஆகி விட்டது.

இராமருக்குப் பிறகு வந்த பலரும் அவரின் சமரச தியாக வழியை பின்பற்றி உள்ளனர்.

 இராமரின் தாக்கம் பெரும்பாலான இந்தியர்களிடம்  இந்தியனிடமும் அவர்கள்  அறிந்தோ அறியாமலோ உள்ளது.  பல்லாயிரம் ஆண்டுகளுக்குப் பின் வந்த சமீபத்திய அரசியல் வாதியான காந்தியும் இராமரின் வழியையே பின்பற்றினார். அவர் எந்தப் பதவியையும் தேடவில்லை.

தனக்காக எந்த சொத்தையும் சேர்க்கவில்லை. காந்தியைப் பற்றி நான் உங்களுக்கு சொல் வேண்டியதில்லை. இன்றைக்கு உலகில் உள்ள அரசியல் சமூக சிந்தனையாளர்களின் முக்கிய நம்பிக்கை காந்தியின் கொள்கைகளிடமே உள்ளது. ரகுபதி ராகவா ராஜா ராம் ஈஸ்வர அல்லா தேரே நாம் என்ற மத நல்லிணக்கப் பாடலைப் பாடி  ராம ராஜ்ஜியம் அமைக்க விரும்பிய காந்தி, இராமரின் தியாகக் கொள்கைகளை  முழுதுமாக உள் வாங்கி சிறப்பாக வெளிப் படுத்தி இருக்கிறார் என்று சொன்னால் அது மிகை அல்ல.

ஆசை வெறிக்கு  மாற்றாக அன்பையும்

பிடிவாதத்துக்கு மாற்றாக விட்டுக் கொடுக்கும் தன்மையையும்

மோதலுக்கு மாற்றாக  சமரசத்தையும்

அடித்துப் பிடுங்குவதற்கு மாற்றாக தியாகத்தையும்  

 முன் வைத்து தான் ஒரு ரோல் மாடல் ஆக வாழ்ந்து கட்டியதுதான், இராமர் காட்டுக்கு செல்லும் தியாக முடிவை எடுத்ததன் மூலம்  மனித குலத்துக்கு கிடைத்த நன்மை.

 
 
 

Labels:

0 Comments:

Post a Comment

<< Home